மோட்டார்கள் திருடிய 6 பேர் கைது


மோட்டார்கள் திருடிய 6 பேர் கைது
x

திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மோட்டார்கள் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருபுவனை

திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மோட்டார்கள் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார்கள் திருட்டு

திருபுவனையில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலையில் (ஸ்பின்கோ), கடந்த மாதம் தொழிலாளர்களுக்கு 15 நாட்கள் 'லே-ஆப்' வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வழக்கம் போல் மில் இயங்கி வருகிறது. நூற்பாலையில் 50-க்கும் மேற்பட்ட ஸ்பேர் மோட்டார்கள் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் (மே) மோட்டார்களை எடுக்க சென்றபோது 41 மோட்டார்கள் திருடு போய் இருப்பதை அறிந்து அதிகாரிகள் திடுக்கிட்டனர்.

இதுதொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில் தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மோட்டார்களை திருடிச்சென்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசில் சிக்கினர்

மோட்டார்கள் திருட்டு குறித்து கூட்டுறவு நூற்பாலை உதவி மேலாளர் குமார் தெரிவித்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு, குற்றவியல் போலீசார் பார்த்தசாரதி, அசோகன் மற்றும் மேற்கு பகுதி குற்றவியல் போலீசார் திருவண்டார் கோவில் பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 4 பேர் கும்பல் 2 சாக்குப் பைகளில் 6 மோட்டார்களை தலையில் தூக்கி சென்றார்கள். அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

திருடியது எப்படி?

இதில் அவர்கள், திருவாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த நாகப்பன் (வயது53), ராமராஜ் (30), சரவணன் (30), மனோகர் (25) என்பது தெரியவந்தது. திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மோட்டார்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (30), கலியபெருமாள் (35) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் கூட்டுறவு நூற்பாலையில் உள்ள மின் மோட்டார்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஜன்னல் வழியாக கயிறு கட்டி இறங்கி, மோட்டார்களை ஒவ்வொன்றாக சுவருக்கு வெளியே தூக்கி வீசி உள்ளனர். அவற்றை அங்கிருந்து மற்றவர்கள் சேகரித்து வீட்டில் பதுக்கி வைத்து இருந்துள்ளனர். இந்தநிலையில் மோட்டார்களை விற்பதற்காக கொண்டு சென்றபோது தான் போலீசில் சிக்கினர்.

கைது

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 மோட்டார்கள், மோட்டார்களில் இருந்து உடைக்கப்பட்ட 11 கிலோ காப்பர் வயர்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

திருபுவனை பகுதியில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.


Next Story