7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி
அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போராட்டங்கள்
புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களில் உள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பணி ஓய்வுபெற்றவர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
உள்ளாட்சி நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி 1-1-2016 முதல் 1-10-2018 வரை வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தீர்க்க எதிர்வரும் பட்ஜெட்டில் தகுந்த நிதி ஒதுக்கக்கோரி அரசுக்கு நினைவூட்டும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
7-வது ஊதியக்குழு பரிந்துரை
புதுவை மாநிலத்திலுள்ள அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களும் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி செயல்பட்டு வருகின்றன. அப்படியே நிதி வழங்கினாலும் ஒருசில அதிகாரிகளின் தவறான கொள்கை முடிவுகளால் வேறு சில திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு அதனால் ஏற்படும் இழப்பு என பல்வேறு காரணங்களால் அரசு சார்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
எனவே முதல்-அமைச்சர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் போதிய நிதியை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். மேலும் அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






