89 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி


89 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
x

புதுச்சேரி, காரைக்காலில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 89.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

ரங்கசாமி வெளியிட்டார்

புதுவை-காரைக்காலுக்கான முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை புதுச்சேரி, காரைக்காலில் 7 ஆயிரத்து 797 மாணவர்கள், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 பேர் எழுதினார்கள். இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்கள், 7 ஆயிரத்து 38 மாணவிகள் என 13 ஆயிரத்து 738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3.80 சதவீதம் குறைவு

தேர்ச்சி சதவீதம் 89.12 ஆக உள்ளது. கடந்த ஆண்டு 92.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு தேர்ச்சி 3.80 சதவீதம் குறைவாக உள்ளது. அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி 78.92 சதவீதமாக உள்ளது.

காரைக்காலை பொறுத்தவரை அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி 68.06 சதவீதமாகவும், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி 90.56 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 79.43 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது பெறப்பட்டுள்ள தேர்ச்சியை திருப்தி என்று கூறமுடியாது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்

தற்போது நாம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற உள்ளோம். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் நமச்சிவாயம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., கல்வித்துறை செயலாளர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷணி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story