பிறந்து 29 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை உயிரோடு மண்ணுக்குள் புதைத்து கொன்ற கொடூர தாய்...!


பிறந்து 29 நாட்களே ஆன குழந்தையை உயிருடன் புதைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி,

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது32). நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர் சென்னை, புதுவை பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2-வதாக திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமானார். இந்நிலையில் குமரேசன் சங்கீதாவை அழைத்துக்கொண்டு புதுவை கிருமாம்பாக்கத்துக்கு வந்தார். இருவரும் அங்குள்ள சமுதாய கூடம் அருகே உள்ள காலி இடத்தில் வசித்தனர். பின்னர் புதுக்குப்பம் குளக்கரை அருகே தங்கியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர். நேற்று இரவு குளக்கரையில் குமரேசன், சங்கீதா இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு தூங்கினர். இன்று காலை கண்விழித்த போது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பகுதியில் குழந்தையை தேடினர்.

இதற்கிடையே கிருமாம்பாக்கம் சுடுகாட்டில் இன்று காலை ஒரு குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த குமரேசன், சங்கீதா தம்பதியினர் அங்கு வந்தனர். அப்போது மணலில் புதைக்கப்பட்டு இருந்தது அவர்களது குழந்தை தான் என்பது தெரியவந்தது.

போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் இது தொடர்பாக குமரேசன், சங்கீதா தம்பதியிரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சங்கீதாவே தனது குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்தது தெரியவந்தது.

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நள்ளிரவில் குழந்தையை தூக்கி சென்று உயிருடன் மண்ணில் புதைத்ததாக சங்கீதாவே ஒப்புதல் அளித்துள்ளார். குழந்தையை மண்ணில் புதைத்து விட்டு காணாமல் போனதாக நாடகம் ஆடிய சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story