மது போதையில் டிரைவர் இயக்கிய அரசு பஸ் சிறைபிடிப்பு


மது போதையில் டிரைவர் இயக்கிய அரசு பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 4 May 2023 4:45 PM IST (Updated: 4 May 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் மதுபோதையில் டிரைவர் ஓட்டிச் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

காரைக்கால்

காரைக்காலில் மதுபோதையில் டிரைவர் ஓட்டிச் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

எச்சரிக்கை பலகை

காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று இரவு 10 மணி அளவில் தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை ராஜராஜன் என்பவர் ஓட்டினார். கண்டக்டராக பூபதி என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

திருநள்ளாறு அருகே தரைப்பாலம் பகுதியில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.

இதை கவனிக்காமல் டிரைவர் ராஜராஜன் நேராக பஸ்சை இயக்கினார். இதனால் பயந்து போன பயணிகள், பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். இருப்பினும் அவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். இதையடுத்து பயணிகள் டிரைவரிடம் வாக்குவாதம் செய்து பஸ்சை நிறுத்தினர்.

போலீசில் ஒப்படைப்பு

அப்போது டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர் ராஜராஜனை பிடித்து, அருகில் உள்ள திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர் காரைக்கால் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜராஜனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மது போதைக்குரிய பரிசோதனைக்கு உட்படுத்தி, அரசு முறைப்படி அவருக்கு நோட்டீஸ் வழங்கி விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே நடுவழியில் தவித்த பயணிகளை வேறு தமிழக அரசு பஸ்சில் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

மது போதையில் டிரைவர் இயக்கிய அரசு பஸ்சை பயணிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Related Tags :
Next Story