அரிக்கன்மேட்டில் கப்பல் வடிவில் அருங்காட்சியகம்


அரிக்கன்மேட்டில் கப்பல் வடிவில் அருங்காட்சியகம்
x

புதுவை அரிக்கன்மேட்டில் கப்பல் வடிவில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை மேற்கொண்டார்.

புதுச்சேரி

புதுவை அரிக்கன்மேட்டில் கப்பல் வடிவில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை மேற்கொண்டார்.

அரிக்கன்மேடு

புதுவை அரியாங்குப்பம் அருகே உள்ள அரிக்கன்மேடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும். இங்கிருந்து ரோம் நாட்டுடன் கப்பல் மூலம் வர்த்தகம் நடந்து வந்தது.

இதற்கு அடையாளமாக அங்கிருந்து நாணயங்கள், செப்பேடுகள், பாசி மணிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது அந்த இடம் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் தற்போது அங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

கப்பல் வடிவ அருங்காட்சியகம்

இந்த இடத்தை சுற்றுலா தலமாக புதுவை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது இங்கு கப்பல் வடிவத்தில் அருங்காட்சியக கட்டிடம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.6 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் அரிக்கன்மேடு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி கருத்தரங்க கூடம் ஒன்றும் அமைகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் வந்து சிற்றுண்டி அருந்த ஓட்டல் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

அமைச்சர் ஆலோசனை

இந்த அருங்காட்சியகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள், தொல்லியல்துறை அதிகாரி சத்தியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல்கட்டமாக இந்த திட்டத்துக்கு தொல்லியல்துறையின் அனுமதியை பெறுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவதாக தொல்லியல்துறை அதிகாரி சத்தியன் தெரிவித்தார்.


Next Story