கடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சல்


கடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சல்
x

காரைக்காலில் கடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சலை மீனவர்கள் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.

காரைக்கால்

காரைக்காலில் கடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சலை மீனவர்கள் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.

கடலில் மிதந்த பார்சல்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் பட்டினச்சேரி சுனாமி நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 49). மீன்பிடி தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் தனக்கு சொந்தமான பைபர் படகில், ரஞ்சித் (30) என்பவருடன் கடலில் மீன்பிடிக்க சென்றார்.

கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பியபோது, படகின் ஓரமாக டேப் சுற்றப்பட்ட நிலையில் பார்சல் ஒன்று மிதந்து வந்துள்ளது. அதை மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்தனர். அந்த பார்சலில் என்ன இருக்குமோ என்று தெரியாத நிலையில் அங்கு வைத்து பிரித்துப் பார்க்க முடியாமல் அச்சமடைந்தனர்.

கடத்தப்பட்டதா?

இதையடுத்து அந்த பார்சலை கிராம பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தனர். இதன்பின் அந்த பார்சலின் ஒரு பகுதியை கிழித்து பார்த்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை திரு-பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். அதை எடைபோட்டு பார்த்ததில் சுமார் 1 கிலோ இருந்தது.

கடல் வழியாக யாராவது கஞ்சாவை கடத்தி சென்றபோது, தவறி கடலில் விழுந்திருக்கலாம் அல்லது கஞ்சாவை கடத்திச் செல்லும் போது, கடலோர காவல்படையினரிடம் சிக்காமல் இருக்க கடலில் வீசி எறிந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மீனவர்களுக்கு பாராட்டு

இதுகுறித்து திரு-பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே கடலில் மிதந்து வந்த கஞ்சாவை போலீசாரிடம் ஒப்படைத்த மீனவர்களை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் வெகுவாக பாராட்டினார்.


Next Story