புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை


புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை
x

புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

காரைக்கால்

புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

காரைக்கால் மாவட்டத்தை போதைப்பொருள் அல்லாத காரைக்காலை உருவாக்குவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி பேசியதாவது:-

போதைப்பொருள் அல்லாத காரைக்காலை உருவாக்குவதில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவது பாராட்டத்தக்கது. இதை மேலும் தீவிரப்படுத்தவேண்டும். மாணவர்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட புகையிலை சம்பந்தமான பொருட்கள் உள்ளனவா? என வாரம் 2 முறை சோதனை நடத்த வேண்டும்.

குறிப்பாக பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். காரைக்கால் கடற்கரையில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விழிப்புணர்வு வீடியோ, சிறு நாடகங்கள் நடத்த வேண்டும்.

தீவிர கண்காணிப்பு

காரைக்காலுக்கு புகையிலை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்பதை தீர ஆராய்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். டாக்டர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் முக்கிய மருந்து அளிப்பதை தவிர்க்க வேண்டும். கடலோர காவல் படை மற்றும் காரைக்கால் துறைமுக பகுதிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து காரைக்கால் மாவட்டத்தில் புகையிலை மற்றும் போதைப்பொருட்களை தடுப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை கலெக்டர் ஜான்சன், போலீஸ் சூப்பிரண்டுகள் நித்தின் கவுகால் ரமேஷ், சுப்பிரமணியன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், நகராட்சி, கொம்யூன் பஞ்சயத்து ஆணையர்கள் கலந்துகொண்டனர்.


Next Story