சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு மணீஷ்


சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு மணீஷ்
x
தினத்தந்தி 24 Jun 2023 5:58 PM GMT (Updated: 25 Jun 2023 6:12 AM GMT)

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரிக்கை விடுத்தார்.

காரைக்கால்,

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரிக்கை விடுத்தார்.

பதவி ஏற்பு

காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்துவந்த லோகேஸ்வரன், மிசோரம் மாநிலத்திற்கு மாற்றலாகி போனதையடுத்து, புதுச்சேரியிலிருந்து விஷ்ணுகுமார் தற்காலிகமாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக கூடுதல் பதவி வகித்து வந்தார். சுமார் ஒரு மாதக்காலம் பதவி வகித்து வந்த இவர் டெல்லிக்கு மாற்றலாகி போனதையடுத்து, புதுவை ஐ.ஆர்.பி.என் கமாண்டன்ட் ஆக இருந்த மணீஷ் ஐ.பி.எஸ். இன்று காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார்.

பின்னர் அனைத்து காவல் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

காரைக்காலில் அண்மைக் காலமாக போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவதுடன், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா விற்பனையும் கூடியிருக்கிறது. இவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துபவர்களை புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு துணையுடன் கண்காணிக்கப்படும். சமூக வலைத்தளங்கள் மூலம் தேவையற்ற வதந்தி, பதற்றம், குழப்பம், அமைதி குலைப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலில் சாலை விபத்துகளுக்கு மனித தவறுகள் காரணம். சாலை விதிகளை மீறல், அதி வேகம், கவனக்குறைவு, அலட்சியம் போன்றவை காரணமாகின்றன. சாலை விபத்துக்களைத் தடுக்க மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

நிலுவை வழக்கு தனிகவனம்

காரைக்கால் மாவட்டத்தின் எல்லா முக்கிய சாலைகளிலும் தொடர் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தவறுகள் நிகழாமல் தடுக்க சிறப்புபிரிவு, குற்றப்பிரிவுகளில் காவலர் எண்ணிக்கை கூட்டப்பட்டு அப்பிரிவு பலப்படுத்தப்படும். காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் தெற்கு சுப்பிரமணியன், வடக்கு நிதின் கவுஹால் ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூடுதல் பொறுப்பு

இந்த நிலையில் மணீஷ் வகித்து வந்த கமாண்டன்ட் பொறுப்பினை புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா கூடுதலாக கவனிக்கிறார்.

அதேபோல் வயர்லெஸ் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பினையும் கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் தெரிவித்துள்ளார்.


Next Story