பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலை படிப்புகளுக்கு அனுமதி


பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலை படிப்புகளுக்கு அனுமதி
x

பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலை படிப்புகளை தொடங்கவும், நுண்கலை படிப்பில் கூடுதல் மாணவர்களை சேர்க்கவும் புதுவை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரி

பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலை படிப்புகளை தொடங்கவும், நுண்கலை படிப்பில் கூடுதல் மாணவர்களை சேர்க்கவும் புதுவை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

பாரதியார் பல்கலைக்கூடம்

புதுவை அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு இளங்கலையில் இசை, நடனம் மற்றும் நுண்கலை பாடப்பிரிவுகள் உள்ளன.

அதேநேரத்தில் அவற்றில் முதுகலை படிப்புக்கு மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே முதுகலை படிப்புகளை இங்கேயே தொடங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் ஆலோசனையின்பேரில் கலை, பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள் ஆகியோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

முதுகலை படிப்புக்கு அனுமதி

இதற்கான தொடர்பு அதிகாரியாக பாரதியார் பல்கலைக்கூடத்தின் நாட்டியத்துறை தலைவர் லூர்துசாந்தி நியமிக்கப்பட்டார். தொடர் முயற்சியின் காரணமாக புதுவை பல்கலைக்கழகமானது, பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலை படிப்புகளுக்கு இந்த கல்வியாண்டில் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை அமைச்சர் சந்திரபிரியங்கா முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.

இதன்படி முதுகலையில் எம்.பி.ஏ. இசை, எம்.பி.ஏ. நாட்டியம், எம்.எப்.ஏ. நுண்கலை ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 20 இடங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இதனால் புதுவையின் முன்னாள் மாணவர்களும், தற்போது இளங்கலை முடித்த மாணவர்களும் பயனடைவார்கள்.

கூடுதல் மாணவர்கள்

மேலும் பி.எப்.ஏ. நுண்கலை படிப்பில் ஏற்கனவே இருந்து வந்த மாணவர் சேர்க்கை 30-லிருந்து 40 ஆக உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story