அ.தி.மு.க. சொந்த புத்தியில் செயல்படவில்லை

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. சொந்த புத்தியில் செயல்படவில்லை என்று முத்தரசன் கூறினார்.
புதுச்சேரி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. சொந்த புத்தியில் செயல்படவில்லை என்று முத்தரசன் கூறினார்.
நூற்றாண்டு விழா
பொதுவுடமை கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு தொடக்க விழா மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் புதுவை சாமிப்பிள்ளை தோட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் தமிழ்ஒளியின் உருவப்படத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் மரியாதை செலுத்தினார்.
புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலுக்காக இடஒதுக்கீடு
கவிஞர் தமிழ்ஒளிக்கு புதுவை அரசு சிலை அமைப்பதுடன் அவரது பெயரில் வைப்பு நிதி உருவாக்கவேண்டும். நாடு இப்போது ஜனநாயக பாதையைவிட்டு சர்வாதிகார பாதையில் போகிறது. எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் தன்னிச்சையாக நாட்டின் பெயர் மாற்றப்படுகிறது. மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டசபையில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஏற்கனவே நாடாளுமன்ற மேல்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க. கடந்த 2014, 2019 தேர்தல்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறியது. ஆனால் ஆட்சிக்காலம் முடிய உள்ள நிலையில் தற்போது இட ஒதுக்கீடு மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை கருதி மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறுவதற்காக மகளிர் மசோதாவை அவசர கோலத்தில் பா.ஜ.க. நிறைவேற்றி உள்ளது.
சொந்த புத்தி இல்லை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர். அவர் எதையாவது பேசிவிட்டு பின்னர் அப்படி பேசவில்லை என்று மறுப்பார். அண்ணா பெயரில் கட்சி நடத்துபவர்கள் திடீரென்று அவரை விமர்சித்தார்கள். இப்போது விமர்சிக்கவேண்டாம் என்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. சொந்த புத்தியில் செயல்படவில்லை. மோடியின் உத்தரவின் பேரிலேயே செயல்படுகிறது. மோடியின் உத்தரவை ஏற்று செயல்படும் அடிமை அமைப்பாக மாறிவிட்டது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.






