புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டு தேர்வு


புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டு தேர்வு
x

கோடை வெயில் காரணமாக புதுவை பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை முன்கூட்டியே தேர்வு நடத்தப்படுகிறது.

புதுச்சேரி

கோடை வெயில் காரணமாக புதுவை பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை முன்கூட்டியே தேர்வு நடத்தப்படுகிறது.

முன்கூட்டியே தேர்வு

கோடை வெயில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முழு ஆண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் புதுவையிலும் நடத்த அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

ரங்கசாமியுடன் ஆலோசனை

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் கல்வித்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு வகுப்பு கூடாது

2022-23-ம் கல்வி ஆண்டு 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வருகிற 24-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுவதாக கல்வித்துறையால் அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

தற்போது கோடை வெயில் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு முன்கூட்டியே தொடங்கும் வகையில் தேர்வு அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வருகிற 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும். அதனை தொடர்ந்து 20-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

இந்த விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது. இது குறித்து கோரிக்கைகள் வந்தால் அப்போதைய சூழ்நிலையை பொறுத்து அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதிய அட்டவணை

புதிய அட்டவணையின்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 11-ந்தேதி தமிழ், 12-ந்தேதி ஆங்கிலம், 18-ந்தேதி கணக்கு (1, 2-ம் வகுப்பு தவிர்த்து), 19-ந்தேதி சுற்றுச்சூழல் அறிவியல் (1, 2-ம் வகுப்பு தவிர்த்து) தேர்வுகள் நடைபெறும். 1, 2-ம் வகுப்புகளுக்கு 19-ந்தேதி கணக்கு பாட தேர்வு நடைபெறும். 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை காலையிலும், 4, 5-ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும்.

மேலும் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு 11-ந்தேதி மொழிப்பாடம், 12-ந்தேதி ஆங்கிலம், 15-ந்தேதி கணக்கு, 18-ந்தேதி அறிவியல், 19-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வுகள் நடைபெறும். 8, 9-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 6, 7-ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும்.


Next Story