போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தூக்குப்போட்டு சாவு


போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தூக்குப்போட்டு சாவு
x

புதுவையில் கருப்பு பணத்தை மாற்றிக்கொடுக்க உதவிய என்ஜினீயர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

கருப்பு பணத்தை மாற்றிக்கொடுக்க உதவிய என்ஜினீயர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயர்

முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்தவர் வேளாங்கண்ணிதாசன் (வயது 56). புதுச்சேரி நகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதிக்கு புவனேஸ்வரன் (23) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். புவனேஸ்வரன் என்ஜினீயரிங் முடித்து விட்டு வீட்டில் இருந்த படியே தனியார் கல்வி குழுமம் ஒன்றில் ஆன்லைன் மூலமாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரும், கர்நாடகா மாநிலம் மங்களூர் போலீசாரும் வேளாங்கண்ணிதாசன் வீட்டிற்கு சென்று புவனேஸ்வரனை சந்தித்து கடந்த 2020-ம் ஆண்டு அவரது வங்கி கணக்கில் நடைபெற்ற ஒரு பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

கருப்பு பணம் பரிமாற்றம்

அதில், மங்களூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புவனேஸ்வரனுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளார். அவர் அங்கிருந்து கருப்பு பணம் ரூ.5½ லட்சம் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதில் 10 சதவீதம் பணத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதி பணத்தை அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பும்படி கூறியுள்ளார். அதனை புவனேஸ்வரன் தனது தந்தையின் வங்கி கணக்கை பயன்படுத்தி மாற்றி அனுப்பியது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், ஒரு வாரத்திற்குள் மங்களூர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர். இதனால் அவர் மிகுந்த பயத்துடன் இருந்து வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் வீட்டின் மாடி அறையில் தனியாக இருந்த புவனேஸ்வரன், மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story