கிரேனில் இருந்து மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலி


கிரேனில் இருந்து மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 23 Sep 2023 3:32 PM GMT (Updated: 23 Sep 2023 3:33 PM GMT)

காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் மின்பாதை அமைக்கும் பணியின்போது கிரேனில் இருந்து மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியானார்.

கோட்டுச்சேரி

காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் மின்பாதை அமைக்கும் பணியின்போது கிரேனில் இருந்து மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியானார்.

மின்கேபிள் புதைக்கும் பணி

காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி காரைக்கால் கோவில்பத்து ஜிப்மர் மருத்துவமனை அருகில் காரைக்கால்-பேரளம் ரெயில் பாதை திட்டத்தில் மின்சார கேபிள்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக ராட்சத மின் கேபிள் பண்டல்கள் அங்கு கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த கேபிள் புதைக்கும் பணியில் திருநள்ளாறை அடுத்த சுரக்குடியை சேர்ந்த எலக்ட்ரீசியன் விக்னேஷ்வரன் (வயது 30) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அறுந்து விழுந்த கேபிள் பண்டல்

அப்போது எதிர்பாராத விதமாக கிரேனுடன் சேர்த்து கேபிள் பண்டலைக் கட்டியிருந்த ரோப் அறுந்தது. இதனால் கிரேனில் இருந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கேபிள் பண்டல் விழுந்தது. அப்போது கேபிள் புதைக்க தோண்டப்பட்டிருந்த குழிக்குள் நின்றிருந்த விக்னேஸ்வரன் மீது விழுந்தது.

இதில் கேபிள் பண்டலின் அடியில் சிக்கிய விக்னேஷ்வரன் நசுங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் கிரேன் மூலம் மின்கேபிள் பண்டலை அகற்றி அவரை மீட்டனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விக்னேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கிரேன் ஆபரேட்டர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஆபரேட்டர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற அவலம்

விக்னேஸ்வரன் விபத்தில் சிக்கியதும் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், அங்கிருந்த தொழிலாளர்கள் விக்னேஸ்வரனை மோட்டார் சைக்கிளில் உட்காரவைத்து, பிடித்துக் கொண்டே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது விக்னேஸ்வரனின் கால் சாலையில் உரசிக் கொண்டே போனதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது விரல் நகங்கள் பெயர்ந்து சின்னாபின்னமாகி இருந்தது.


Next Story