மரப்பாலம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்


மரப்பாலம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்
x

சாலை சீரமைக்கும் பணியால் மரப்பாலம் சந்திப்பு மற்றும் கடலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுச்சேரி

சாலை சீரமைக்கும் பணியால் மரப்பாலம் சந்திப்பு மற்றும் கடலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலை சீரமைப்பு

புதுவை முருங்கப்பாக்கம் சந்திப்பு அருகே கடலூர் சாலையில் கடந்த வாரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிக அழுத்தத்துடன் தண்ணீர் வெளியேறியதால் சாலை கடுமையாக பெயர்த்தெரியப்பட்டது.

உடனடியாக குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்ட சாலையும் தற்காலிகமாக மணல் மூடி சரிசெய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு சாலையை தோண்டி சிமெண்டு கலவை கொட்டி சீரமைக்கும் பணி நடந்தது.

போக்குவரத்து நெரிசல்

சிமெண்டு கலவை கொட்டி சில மணிநேரம் காய வைக்கவேண்டும் என்பதால் காலைநேரத்தில் அந்த பகுதி வழியாக கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கனரக வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பிலேயே இந்திராகாந்தி சிலை, வில்லியனூர் பாதை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன.

இதனால் மரப்பாலம் சந்திப்பு, இந்திரகாந்தி சிலை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூர் சாலை, சிமெண்டு ரோடு, 100 அடி ரோடு பகுதியில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பின்னர் சிறிதுநேரம் கழித்து கடலூர் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

பிற்பகலில் சீரானது

சிமெண்டு கலவை கொட்டப்பட்ட இடத்தில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததால் மிகக்குறுகிய இடத்தில் ஒவ்வொரு வாகனமாக அனுப்பப்பட்டதால் கடலூர் சாலையில் மரப்பாலம்-முருங்கப்பாக்கம் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதன்பின் பிற்பகலில் தடுப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. அதன்பின்னரே போக்கு வரத்து சீரடைந்தது.


Next Story