திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை எதிரொலியாக திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வில்லியனூர்
தொடர் விடுமுறை எதிரொலியாக திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புஷ்கரணி விழா
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சியில் காசிக்கு வீசம் பெற்ற கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், புண்ணிய நதியான சங்கராபரணி ஆற்றில் நீராடி, கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
விழாவின் 9-ம் நாள் உற்சவம் இன்று நடந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஆரத்தி விழாவிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், கோவில் ஊழியர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ரோஜா சாமி தரிசனம்
விழாவில் 10-ம் நாள் உற்சவ நிகழ்ச்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆந்திரா மந்திரியும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். மேலும் ஞாயிறு, திங்கள் 2 நாட்கள் விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.