கல்வித்துறை அலுவலகத்தை ரொட்டி பால் ஊழியர்கள் முற்றுகை

நிலுவை சம்பளம் தொகையை வழங்கக்கோரி கல்வித்துறை அலுவலகத்தை ரொட்டி பால் ஊழியர்கள் முற்றுகையிட்ட 98 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி ரொட்டி பால் ஊழியர்கள் தங்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கல்வித்துறை அலுவலக நுழைவாயில் கேட்டை இழுத்து மூடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு ரொட்டி பால் ஊழியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் கல்வித்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இது பற்றிய தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






