கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

பாகூர் நகரின் மையப்பகுதியிலுள்ள பூலோக மாரியம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்

பாகூரின் மையப்பகுதி மார்க்கெட் தெரு நான்குமுனை சந்திப்பில் பூலோக மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மாலை கோவில் பூசாரி பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு பூசாரி வந்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரும்பினால் ஆன உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருட்டு போயிருந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோவில் கதவு பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊரின் மையப்பகுதியில், போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் மர்ம ஆசாமிகள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோவிலில் இதுவரை 4 முறை உண்டியல் பணம் திருட்டு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story