தலைமை செயலகத்தில் தேர்வர்கள் தர்ணா


தலைமை செயலகத்தில் தேர்வர்கள் தர்ணா
x

புதுச்சேரியில் நடந்த சுருக்கெழுத்தர் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி தேர்வு எழுதியவர்கள் தலைமை செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் நடந்த சுருக்கெழுத்தர் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி தேர்வு எழுதியவர்கள் தலைமை செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சுருக்கெழுத்தர் தேர்வு

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (பணியாளர் சிறகம்) சார்பில் சுருக்கெழுத்தர் நிலை-2 பதவியில் காலியாக உள்ள 35 பணியிடங்களை நிரப்புவதற்காக பிளஸ்-2 படிப்பை தகுதியாக கொண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு சுருக்கெழுத்தர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தேர்வர்களின் கோரிக்கையை தொடர்ந்து நேற்று அந்த தேர்வு நடத்தப்பட்டது.

அதன்படி புதுவை காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்லைக்கழகத்தில் இன்று சுருக்கெழுத்தர் தேர்வு 2 பிரிவுகளாக நடந்தது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ஒரு பிரிவுக்கும், காலை 10.30 மணி முதல் 12 மணி வரை மற்றொரு பிரிவுக்கும் நடந்தது. இந்த தேர்வை 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுதினர்.

குளறுபடி

முதல் பிரிவில் நடந்த தேர்வில் வினாத்தாளை 10 நிமிடம் வாசிப்பதற்கு பதிலாக 8 நிமிடங்களுக்குள் வாசித்து முடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இடையிடையே பல்வேறு திருத்தங்கள் சொல்லியதாகவும் தெரிகிறது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். 2-வது பிரிவிலும் சில குளறுபடி நடந்ததாக தெரிகிறது.

தேர்வு முடிந்தவுடன் தேர்வு எழுதியவர்கள் குளறுபடி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காலாப்பட்டு போலீசார் அங்கு வந்து தேர்வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

போராட்டம்

இருந்தபோதிலும் தேர்வு எழுதியவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து புறப்பட்டு புதுவை கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்திற்கு வந்தனர். அவர்கள் தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுருக்கெழுத்தர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளதாகவும், உடனடியாக மறுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியகடை போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் கோரிக்கைளை குறித்து மனுவாக எழுதி தலைமை செயலக அலுவலகத்தில் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story