காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்


காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சியினர்   மனித சங்கிலி போராட்டம்
x

மின்துறை தனியார் மயத்தை கண்டித்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

மின்துறை தனியார் மயத்தை கண்டித்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

மின்துறை தனியார் மயம்

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணிகட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மனிதசங்கிலிபோராட்டம் நடைபெற்றது. புதுவை அண்ணா சிலை முதல் ராஜா தியேட்டர் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மனித சங்கிலி போராட்டம்

இதில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ர மணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல். ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் சாலையின் இருபுறமும் ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மின்துறை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

வைத்திலிங்கம் எம்.பி.

இதேபோல் காமராஜர் நகரில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையிலும், லாஸ்பேட்டை உழவர்சந்தை பகுதியில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமையிலும், பாகூரில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையிலும், தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், தி.மு.க. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் புசு.இளங்கோவன், சன்.சண்முகம், ராஜாராமன் ஆகியோர் தலைமையிலும், அரியாங்குப்பம் பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சங்கர் தலைமையிலும், திருக்கனூரில் ஜி.பி.கே.பரமசிவம், ஏ.கே. குமார் ஆகியோர் தலைமையிலும், வில்லியனூர் பத்துக்கண்ணு பகுதியிலும் போராட்டம் நடந்தது.

இதில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்டு லெனினிஸ்ட், புதிய நீதி கட்சி, இந்திய குடியரசு கட்சி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story