முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் ஒப்பந்த நர்சுகள் சந்திப்பு


முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் ஒப்பந்த நர்சுகள் சந்திப்பு
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஒப்பந்த நர்சுகள் சந்தித்து வலியுறுத்தினர்.

புதுச்சேரி

பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஒப்பந்த நர்சுகள் சந்தித்து வலியுறுத்தினர்.

நர்சுகள் போராட்டம்

கொரோனா பரவலின்போது புதுவை அரசின் சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் 165 நர்சுகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த ஜூலை மாதம் முதல் ஒப்பந்தமும் நீட்டிக்கப்படவில்லை.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்சுகள் தங்களை பணிநிரந்தரம் செய்ய கோரி வலியுறுத்தினார்கள். அப்போது புதிதாக நர்சு பணியிடங்களை நிரப்பும்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்தது.

ரங்கசாமி பேச்சுவார்த்தை

இந்தநிலையில் புதுவையில் தற்போது 105 நர்சு பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்த நர்சுகளுக்கு எந்தவித முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ஒப்பந்த நர்சுகள் கடந்த சில நாட்களுக்கு முன் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்துக்குள் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது நர்சுகளுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்தநிலையில் அரைகுறை மனதுடன் போராட்டத்தை வாபஸ் பெற்ற நர்சுகள், நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மீண்டும் சந்தித்து பேசினார்கள்.

வாய்ப்பு வழங்கப்படும்

அப்போது அவர்களிடம், முதல்-அமைச்சர் ரங்கசாமி, பணிநீட்டிப்பு தொடர்பாக கோப்புகள் தயாராகி உள்ளது. பணிநியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இனி அதில் மாற்றம் செய்ய இயலாது. வரும் காலத்தில் அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் ஒப்பந்த நர்சுகளின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம். அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து நர்சுகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story