புதிய சட்டசபை கட்டிடம் குறித்து ஆலோசனை


புதிய சட்டசபை கட்டிடம் குறித்து ஆலோசனை
x

புதுவையில் புதிய சட்டசபை கட்டுமான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

புதுச்சேரி

புதுவையில் புதிய சட்டசபை கட்டுமான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

சட்டசபை கட்டிடம்

புதுவை சட்டசபை பழமை வாய்ந்த கட்டிடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் அவ்வப்போது பழுது பார்க்கும் பணிகளும் நடக்கின்றன. தற்போது இங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் புதிதாக சட்டசபை கட்டிடம் கட்ட நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு வருகிறது. புதிய சட்டசபையை தலைமை செயலகத்துடன் தட்டாஞ்சாவடியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் 6 தளங்களை கொண்டு கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியை டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டது.

ஆலோசனை

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அதனை பார்த்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதில் சில மாற்றங்கள் செய்யும்படி அறிவுறுத்தினார். அதன்படி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.582 கோடியாகும். இந்த கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பரிசீலனை செய்த மத்திய அரசு, அந்த கோப்பின் மீது 5 கேள்விகள் எழுப்பியுள்ளது.

இந்தநிலையில் கோப்பை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு கோப்பிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

நிதித்துறை

இதனை தொடர்ந்து அந்த கோப்பு நாளை(புதன்கிழமை) புதுச்சேரி நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு 2 ஆண்டுகளில் புதிய சட்டசபை கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story