2-வது நாளாக சங்கராபரணி ஆற்றில் குவிந்த பக்தர்கள்

திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் 2-வது நாளாக பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.
வில்லியனூர்
திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் 2-வது நாளாக பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.
புஷ்கரணி விழா
கங்கைக்கு நிகராக கருதப்படும் புதுவை சங்கராபரணி ஆற்றின் கரையில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி காமாட்சி- ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீகங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விழா கடந்த 23-ந் தேதி கோபூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து சப்தநதி தீர்த்த கலாசாபிஷேகம், புஷ்கர தீர்த்தவாரி நடைபெற்றது. மாலையில் சங்கராபரணி நதிக்கரையில் கங்கா ஆராத்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
2-வது நாள்...
புஷ்கரணி விழா 12 நாட்கள் (மே 3-ந் தேதி வரை) நடக்கிறது. 2-வது நாளான இன்று காலை 9 மணிக்கு மகாகணபதி, மகாலட்சுமி யாகம் நடந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்து உள்ளூர் மக்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி கங்கவராக நதீஸ்வரரை வழிபட்டனர்.
மதியம் 12 மணியளவில் தீர்த்தவாரியும், மாலையில் சங்கராபரணி நதிக்கரையில் கங்கா ஆராத்தியும் நடைபெற்றது. இதில் திராளன பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.