65 பள்ளி, கல்லூரி வாகனங்கள் தகுதி நீக்கம்


65 பள்ளி, கல்லூரி வாகனங்கள் தகுதி நீக்கம்
x
தினத்தந்தி 4 Jun 2023 2:13 PM GMT (Updated: 4 Jun 2023 2:20 PM GMT)

புதுவையில் பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக ஆய்வு செய்தனர். அவற்றில் 65 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

புதுச்சேரி

புதுவையில் பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக ஆய்வு செய்தனர். அவற்றில் 65 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

2-வது நாளாக ஆய்வு

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு புதுவை பகுதிக்குட்பட்ட கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்வது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பு முகாம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கனரக ஊர்தி முனையத்தில் நேற்று தொடங்கியது. இந்த முகாம் நேற்று 2-வது நாளாக நடந்தது.

வட்டார போக்குவரத்து அதிகரிகள் சீத்தராமராஜூ, பிரபாகர்ராவ், கலியபெருமாள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தட்சணாமூர்த்தி, பாலசுப்ரமணி, சீனிவாசன், ரவிசங்கர், சண்முகநாதன் மற்றும் அதிகாரிகளை கொண்ட 6 குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

65 வாகனங்கள் தகுதி நீக்கம்

இந்த சிறப்பு முகாமில் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 177 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர வழி, கதவு பூட்டுகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, பெர்மிட், டிரைவர்களின் பணிக்காலம், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ், ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சோதனையின் போது அனைத்தும் சரியாக இருந்த 112 வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 65 வாகனங்களில் மேற்கண்ட வசதிகள் சரிவர இல்லாமல் இருந்ததால் அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டன. குறைபாடுகளை ஒரு வாரத்துக்குள் சரிசெய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


Next Story