2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை


2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
x

புதுவைக்கு ஜனாதிபதி வருகையையொட்டி 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனர்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

புதுச்சேரி

புதுவைக்கு ஜனாதிபதி வருகையையொட்டி 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனர்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு திங்கட்கிழமை புதுச்சேரி வருகிறார். நாளை மறுநாளும் ,செவ்வாய்க்கிழமையும் புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாகி இறங்கியுள்ளனர்.

1500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

டிரோன்கள் பறக்க தடை

மேலும் புதுவை வான்பகுதியில் 2 நாட்கள் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.

மேலும் சாலைகளில் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜனாதிபதி செல்லும் வழியெங்கும் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை பொதுப்பணி, உள்ளாட்சித்துறையினர் அகற்றி வருகின்றனர்.

போக்குவரத்து மாற்றம்

புதுவை ஜிப்மருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜனாதிபதி திரவுபதி முர்மு திங்கட்கிழமை முற்பகல் ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகை தருகிறார். எனவே பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் விதமாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் ஜிப்மர் ஆஸ்பத்திரி வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.

நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படும். ஜிப்மர் பிரதான வாயிலின் இடது மற்றும் வலது பக்கத்தில் உள்ள வாயில் எண்கள் 3 மற்றும் 5 திறந்து வைக்கப்படும். ஆம்புலன்சுகள் மற்றும் நோயாளிகளின் வாகனங்கள் பிரதான வாயிலின் வடக்கு பகுதியில் உள்ள வாயில் எண் 3 வழியாக செல்ல வேண்டும்.

4 சக்கர வாகனங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, பிராந்திய புற்றுநோய் மையம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் ஆகிய இடங்களில் இருந்து வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வெளியேற பிரதான வாயிலின் தெற்கு பகுதியில் உள்ள வாயில் எண் 5-ஐ பயன்படுத்த வேண்டும்.

பொதுமக்களின் 4 சக்கர வாகனங்கள் ஜிப்மர் வளாகத்தினுள் நிறுத்த அனுமதிக்கப்படாது. நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் ஜிப்மர் ஊழியர்கள் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story