குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து மீனவ மக்கள் போராட்டம்


குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து மீனவ மக்கள் போராட்டம்
x

பாகூரில் 15 ஆண்டுகளாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து மீனவ மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகூர்

15 ஆண்டுகளாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து மீனவ மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர்

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிக்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அனைத்து வீடு மற்றும் தெருக்களுக்கு குடிநீர் குழாய்கள் அமைத்து கொடுக்கப்பட்டது.

அதே சமயம் சுனாமி நகர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள 150 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் வினியோகம் செய்யாததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மீனவ மக்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், புதுச்சேரி கலெக்டரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீனவ மக்கள் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த மீனவ மக்கள் நேற்று மாலை ஒன்று திரண்டு கடலில் மண்பானையில் தண்ணீர் எடுத்தும், காலிக்குடங்களுடனும் ஊர்வலமாக சுனாமி குடியிருப்பு தெரு குழாய்க்கு வந்தனர். பின்னர் குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து கடலில் இருந்து கொண்டு வந்த மண்பானையை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர்.

அரசு இனியும் காலதாமதம் செய்தால் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தை காலிக்குடங்களுடன் திரண்டு சென்று பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story