ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி


ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
x

புதுவையில் ரூ.1,600 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

புதுச்சேரி

புதுவையில் ரூ.1,600 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

உதவித்தொகை

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலாப்பட்டு தொகுதியை சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்று பேசினார்.

பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

4 திட்டங்கள்

எங்கள் அரசு பொறுப்பேற்றபின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காலாப்பட்டு தொகுதியை பொறுத்தவரை கடல் அரிப்புதான் முக்கிய பிரச்சினை. இதற்காக ரூ.56 கோடியில் தடுப்புச்சுவர் அமைக்க கற்கள் கொட்டும் பணிகள் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த தொகுதியில் மனைப்பட்டா கொடுப்பதிலும் பிரச்சினை உள்ளது. அதையும் சரிசெய்வோம்.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். முக்கியமாக 4 திட்டங்களை அறிவித்தோம். கியாஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை ஆகிய திட்டங்களை அறிவித்தோம்.

ரூ.1000 உதவித்தொகை 70 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதை படிப்படியாக கொடுத்து வருகிறோம். இதுவரை 8 தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வைப்புத்தொகை

கியாஸ் மானியம் வழங்கும் திட்டமும் இப்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு ரூ.300, மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு ரூ.150 என இப்போது வங்கிக்கணக்கில் மானியம் செலுத்தப்படுகிறது. 19 ஆயிரத்து 100 பேருக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் 200 பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. விபத்து காப்பீடு திட்டத்துக்கு ரூ.98 லட்சம் பிரீமியம் செலுத்தி உள்ளோம். எனவே அறிவித்த 4 திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம்.

மடிக்கணினி

இன்னும் ஒரேயொரு குறை மட்டும் உள்ளது. அதாவது பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்காததுதான் அது. இதற்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் மடிக்கணினி வழங்கப்படும். இலவச அரிசிக்கான பணமும் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

புதுவை நகரப்பகுதியை பொறுத்தவரை இப்போது குடிநீர் ஒன்றுதான் பிரச்சினை. இதற்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த திட்டத்துக்காக ரூ.1,600 கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஏற்கனவே உலக வங்கியிடம் கடன்பெற்று கிராமப்பகுதியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துவர திட்டமிட்டு இருந்தோம். அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story