புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி
பொங்கல் திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சபாநாயகர், நமச்சிவாயம்
சபாநாயகர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,''பொங்கல் பண்டிகை உலக தமிழர்களின் அடையாளம். உழவருக்கு மதிப்பளிக்கும் பெருமிதம். இயற்கையை போற்றி கால்நடைகளை வணங்கும் தெய்வீகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்ட தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம். புதுச்சேரி மாநிலத்தில் வாழும் மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சி மலர வளர்ச்சி காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் நமச்சிவாயம் தனது வாழ்த்து செய்தியில்,'தைத்திங்கள் முதல் நாளாம் பொங்கல் திருநாளில் தங்கள் வீடுகள், ஆலயங்களில் பொங்கலிட்டு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் உன்னத திருநாள் பொங்கல் திருநாள்.உழைப்பால் உயர்ந்து நமக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கும் உழவர் பெருமக்களின் வாழ்க்கை தரம் மேன்மேலும் உயர இந்த பொங்கல் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்' என கூறப்பட்டுள்ளது.
நாராயணசாமி
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,'உழவின்றி நமக்கெல்லாம் உணவில்லை. எனவே, உழவர் திருநாளில் விவசாயம் காக்கவும், விவசாயிகளின் நலன் பேணவும் நாம் உறுதியெடுத்துக்கொள்ளவேண்டும். இந்த தைத்திங்கள் முதல் விவசாயம் செழிக்கட்டும். விவசாயிகளின் துயர் நீங்கங்கட்டும் நம் அனைவரின் வாழ்விலும் நன்மை பிறந்து, நல்லது நடக்கட்டும்.அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்' என கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைய இந்த இனிய தமிழர் திருநாளில் உறுதி கொண்டு பொங்கலிடுவோம். தமிழ் இனத்தின் பெருமையை பண்பாட்டை உலகுக்கு உணர்த்தி உவகையுடன் பொங்கல் வைப்போம். இந்த தை முதல் நாளில் நாம் அனைவரும் எங்கே தமிழர் நலம் கெடுகிறதோ அங்கெல்லாம் கிளர்ந்தெழுந்து, புரட்சி செய்து தமிழர் தம் பெருமையை உணர்த்தி, உயர்த்திக் காப்போம். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,'தமிழர் திருநாள், இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள். உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக படுத்தும் திருநாள். இந்தியாவின் முதுகெலும்பு என்று அனைவராலும் சொல்லப்படுவது விவசாயம் தான். அந்த வகையில் இந்தியாவில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திருநாளில் இறைவனை வணங்கி பொன், பொருள், செல்வம், மகிழ்ச்சி இவை அனைத்தும் அரும்சுவை பொங்கல் போல வாழ்வில் பொங்கிட பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பழகன்
அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,'உலக மக்கள் அனைவருக்கும் அவர்களின் ஜீவாதார பசியை போக்கும் விவசாய பெருமக்களுக்கு சிறப்பு செய்யும் நாள் பொங்கல் திருநாளாகும்.இந்த பொங்கல் திருநாளில் ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, சந்தோஷம், மன நிம்மதி, சிறப்புகள் அமைய கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. கோபால்
உருளையன்பேட்டை தி.மு.க பொறுப்பாளர் கோபால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,'எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைய இந்த தமிழர் திருநாளில் உறுதி கொண்டு பொங்கலிடுவோம். தமிழ், தமிழ் இனத்தின் பெருமையை, கலாசாரத்தை, பண்பாட்டை உலகுக்கு உணர்த்தி உவகையுடன் பொங்கல் வைப்போம். இயற்கை, கால்நடை மற்றும் உழைப்பை போற்றும் பண்பு கொண்ட பொங்கலின் பெருமையை உலகமே அறியும் வண்ணம் தமிழர் திருநாளை கொண்டாடுவோம் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.






