'இந்தியா' கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 4:48 PM GMT (Updated: 6 Oct 2023 5:20 PM GMT)

புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில் நிலம் மோசடி

புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 3 அரசு அதிகாரிகள் உள்பட 17 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அடிபடுவதால் இந்த மோசடி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே அபகரிக்கப்பட்ட கோவில் நிலத்தை கையகப்படுத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் வருவாய்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஊர்வலம்

இந்தநிலையில் கோவில் நிலத்தை மீட்க கோரியும், மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் 'இந்தியா' கூட்டணி சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நேருவீதி, மிஷன்வீதி சந்திப்பில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூடினர்.

அங்கிருந்து தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன்,அனந்தராமன், ம.தி.மு.க. சார்பில் இளங்கோ, வேதா வேணுகோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோஷங்கள் எழுப்பினர்

ஊர்வலம் மிஷன் வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அதற்கு மேல் செல்ல அனுமதி மறுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கேயே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமாட்சியம்மன் கோவில் நிலத்தை அபகரித்த குற்றவாளிகளை அரசு காப்பாற்றக்கூடாது, ஐகோர்ட்டு உத்தரவுபடி கோவில் நிலத்தை கையகப்படுத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் மனு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக தலைமை செயலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story