இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முற்றுகை


இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முற்றுகை
x
தினத்தந்தி 20 Oct 2023 9:14 PM IST (Updated: 20 Oct 2023 9:15 PM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திராகாந்தி விளையாட்டு மைதான நுழைவாயிலை இழுத்து மூடி விளையாட்டு வீரர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி உப்பளத்தில் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் மற்றும் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர், கழிவறை மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

இதனை செய்து தர வேண்டும், சிந்தட்டிக் ஓடுதளத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

முற்றுகை

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள், நேற்று இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் வளவன் தலைமை தாங்கினார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

இதில் சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே மைதானத்தின் நுழைவு வாயிலை இழுத்து மூடியதால் அங்கு பயிற்சிக்கு வந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து மைதானத்தின் நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story