காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்

காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
காரைக்கால்
காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பிரம்மோற்சவ விழா
காரைக்கால் பாரதியார் சாலையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 30-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சகோபுர வீதிஉலாவும், கடந்த 1-ந் தேதி திருக்கல்யாணமும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில் மேளதாளம் முழங்க உற்சவர் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
சபாநாயகர் செல்வம்
சபாநாயகர் செல்வம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் சிவலிங்கம் ராஜா, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் குழு தலைவர் வெற்றிச்செல்வன் மற்றும் நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி வழியாக சென்று மாலை கோவிலை தேர் வந்தடைந்தது. தேரோட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நாளை மறுநாள் தெப்ப உற்சவம்
தேரோட்டத்தையொட்டி காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
பிரம்மோற்சவ விழாவில் வியாழக்கிழமை தெப்ப உற்சவமும், 7-ந் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடக்கிறது.