தனியார் பஸ் மோதி தொழிலாளி தலை நசுங்கி பலி

காரைக்காலில் தனியார் பஸ் மோதி தொழிலாளி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த நிரவி கீழமனை கிராமத்தை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 36). கட்டிட தொழிலாளி. இவருக்கு சந்தனமேரி என்ற மனைவியும், தஷ்வந்த் என்ற 1½ வயது மகனும் உள்ளனர். நேற்று நிரவி அம்மாள் சத்திரம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்ட தண்டாயுதபாணி, வேலை முடிந்ததும் சம்பளம் வாங்குவதற்காக, காரைக்காலுக்கு மோட்டார் சைக்களில் இரவு 8 மணியளவில் வந்தார். காரைக்கால்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் அம்பாள் சத்திரம் தண்ணீர் தொட்டி அருகே வந்தபோது, பின்னால், அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தண்டாயுதபாணி, பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.
இது குறித்த புகாரின்பேரில் பஸ் டிரைவர் நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த ஷேக்தாவூது (44) என்பவர் மீது திரு-பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.