புதுச்சேரியில் விரைவில் சட்ட பல்கலைக்கழகம்

புதுச்சேரியில் விரைவில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் விரைவில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
முன்னாள் மாணவன்
புதுவை காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
இந்த கல்லூரியின் முன்னாள் மாணவனான நான் மாநிலத்தின் முதல்-அமைச்சராக விழாவில் கலந்துகொள்வது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்த கல்லூரி ஒரு சிறிய இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது 28 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நான் படித்தபோது சட்டக்கல்லூரி முதல்வராக இருந்த மாதவ மேனன் என்னை சந்தித்தபோது புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் கொண்டுவர கூறினார்.
26 ஏக்கர் நிலம்
அப்போது நான் மீண்டும் முதல்-அமைச்சராக வரும்போது சட்ட பல்கலைக்கழகம் கொண்டு வருவேன் என்றேன். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 26 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்ட பல்கலைக்கழகம் சிறந்த மாணவர்களை உருவாக்கும்.
விரைவில் அமைக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடம் கிடைக்குமா? என்ற அச்சம் உள்ளது. நிச்சயமாக உரிய இடம் வழங்கப்படும். சட்ட பல்கலைக்கழகத்தில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்களும் படிப்பார்கள். இதனால் புதுவை மாணவர்களுக்கு எந்தவித அச்சமும் தேவையில்லை.
புதுவை சட்டக்கல்லூரியில் படித்தவர்கள் 12 பேர் ஐகோர்ட்டு நீதிபதிகளாக பணியாற்றி உள்ளனர். இளம் வக்கீல்களுக்கு இப்போது நாங்கள் மாதம் ரூ.9 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறோம்.
ஐகோர்ட்டு நீதிபதி பதவி
புதுவை வக்கீல்களுக்கு ஐகோர்ட்டில் நீதிபதி பதவி வாய்ப்பு இருந்தால் தரவேண்டும். புதுச்சேரிக்கு ஐகோர்ட்டு கிளை வேண்டும் என்ற கோரிக்கையும் தனிமாநில அந்தஸ்து கோரிக்கைபோல் நீண்ட நாட்களாக உள்ளது. அதையும் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






