மாம்பழம் கிலோ ரூ.10-க்கு விற்பனை


மாம்பழம் கிலோ ரூ.10-க்கு விற்பனை
x

புதுவை பெரிய மார்க்கெட்டில் மாம்பழம் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி

புதுவை பெரிய மார்க்கெட்டில் கிலோ ரூ.10-க்கு மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது.

விலை வீழ்ச்சி

இந்த மாதம் முக்கனிகளும் தாராளமாக கிடைக்கும் மாதமாக உள்ளது. அதாவது மா, பலா, வாழை ஆகிய கனிகள் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதிலும் இப்போது மாம்பழத்தின் வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக பெரிய மார்க்கெட்டில் (குபேர் அங்காடி) மாம்பழம் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போட்டிபோட்டு..

அந்த மாம்பழங்கள் காலை வேளையில் நேரு வீதியில் வைத்து பெட்டிபெட்டியாக விற்பனை செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

செந்தூரா, நாட்டுக்காய் (குண்டு மாம்பழம்) ஆகியன தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. பிற மாம்பழ வகைகள் கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து மாம்பழ வியாபாரி அபி கூறியதாவது:-

புதுவைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக மாம்பழம் விற்பனைக்கு வருகிறது. மரக்காணம், சோத்துப்பாக்கம், ஆரோவில் மற்றும் கிராமப்புறங்களில் இருந்தும் பழங்கள் வருகிறது. 12 ரக மாம்பழங்கள் தற்போதுபெரிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 டன் மாம்பழமாவது வருகிறது. சில நேரங்களில் இதனை விற்பனை செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதன் காரணமாக மாம்பழங்கள் அழுகி போகின்றன. நேற்று 500 கிலோ மாம்பழத்தை வியாபாரி ஒருவர் குப்பையில் கொட்டினார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story