பக்தர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை


பக்தர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை
x

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை என போலீசாருக்கு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

காரைக்கால்

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை என போலீசாருக்கு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

மாங்கனி திருவிழா

இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையார். இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா 4 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாங்கனி திருவிழா வருகிற 30-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. ஜூலை 1-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 2-ந் தேதி பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சியும், அன்று பிற்பகல் அமுதப் படையல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேற்கண்ட விழா நாட்களில் பக்தர்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடுவார்கள் என்பதால், விழா பாதுகாப்பு குறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் குலோத்துங்கன் பேசியதாவது:-

கூடுதல் கவனம் தேவை

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் தடையின்றி சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவைகள் கோவில் அருகில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பவளக்கால் விமானம் (பிச்சாண்டவர் ஊர்வலம்) செல்லும் பாதைகளில் மரக்கிளைகளை ஒழுங்குபடுத்தவும், தொங்கும் கேபிள் வயர்களை சரிசெய்து மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும். தேர் செல்லும் சாலைகளில் பணிகள் ஏதாவது நடைபெற்றால், அதனை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறைகள் முன் வர வேண்டும்.

முக்கியமாக, விழாக்கள் நடைபெறும் 4 நாட்களிலும், பக்கதர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்பில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அரசுத்துறை அதிகாரிகள்

நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் சம்யக் ஷி ஜெயின், துணை கலெக்டர் பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் அறங்காவல் வாரிய தலைவர் வக்கீல் வெற்றிச்செல்வன் மற்றும் நிர்வாகிகள், சமாதான கமிட்டி உறுப்பினர்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story