எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு செயல்திறன் கற்றல் பயிற்சி

கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களுக்கு செயல்திறன் கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பாகூர்
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்கள் நேரடியாக நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர். இதற்கு முன்னோட்டமாக மருத்துவக் கல்லூரி மருத்துவ திறன் ஆய்வகம் மற்றும் சிமுலேஷன் சென்டர் லேர்டல் மெடிக்கல் உடன் இணைந்து பூட்கேம்ப் எனப்படும் துரிதப்படுத்தப்பட்ட தீவிரமான பயிற்சி பயிலரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சி தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரியில் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான 2 நாள் பயிற்சி நடந்தது. கல்லூரி டீன் கொட்டூர் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். சுகாதார தொழில்முறை கல்வி டீன் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணுபட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனித இயக்க செயல் திறனுடன் கொண்ட பொம்மையில் ரத்த மாதிரி சேகரித்தல், கேத்திடர் டியூப் பொருத்துதல், பிரசவம் முறை, சுவாச குழாய் பொருத்துதல் போன்ற 15 செயல்திறன் கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்களின் திறன் வீடியோ மூலம் பதிவு செய்து, மதிப்பிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் எழில் ராஜன், டாக்டர் ராஜ்குமார் கொண்ட குழு ஏற்பாடு செய்திருந்தது.