மாணவன் குடும்பத்தினருக்கு நாராயணசாமி ஆறுதல்

தற்கொலை செய்து கொண்ட மாணவன் குடும்பத்தினருக்கு நாராயணசாமி ஆறுதல் தெரிவித்தார்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாபு என்பவரின் மகன் விஷ்ணுகுமார் (17). பிளஸ்-2 முடித்து விட்டு மேற்படிப்பு படிப்பதற்காக வீட்டில் இருந்து வந்தார். விபத்து வழக்கு தொடர்பாக ரூ.3 லட்சம் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டில் இருந்து சம்மன் வந்ததால் மனமுடைந்த விஷ்ணுகுமார் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மாநில தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியன் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோர் கூடப்பாக்கத்தில் உள்ள மாணவரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது மாணவனின் பெற்றோர், தன் மகனின் இறப்பிற்கு நீதி கேட்டு முறையிட்டு வருவதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க தவிர்த்து வருவதாக கூறினார்கள்.
இது குறித்து பேசிய நாராயணசாமி, புதுவை ஆட்சியாளர்கள் உடனடியாக இந்த வழக்கை பதிவு செய்து அந்த மாணவனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், புதுவையில் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலே குறியாக உள்ளனர். இது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவனின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.






