வனத்துறை அதிகாரி வாகனத்தை சிறைபிடித்த நரிக்குறவ பெண்கள்

வில்லியனூர் அருகே வனத்துறை அதிகாரி வாகனத்தை சிறைபிடித்த நரிக்குறவ பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே வனத்துறை அதிகாரி வாகனத்தை சிறைபிடித்த நரிக்குறவ பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பறவைகள் வேட்டை
புதுச்சேரியில் பெரிய ஏரியாக வில்லியனூர் அருகே ஊசுட்டேரி அமைந்துள்ளது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த ஏரி புதுவை மற்றும் தமிழக எல்லையில் உள்ளது. இந்த ஏரிப்பகுதியில் கொக்கு மற்றும் அரியவகை பறவைகளை சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர்.
இதை தடுக்க புதுச்சேரி, தமிழக வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஊசுட்டேரியின் தமிழக பகுதியான பூத்துறையில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் திண்டிவனம் சரக வனத்துறை அதிகாரிகள் வில்லியனூர் பட்டாணிகளம் என்ற இடத்தில் வசித்து வரும் நரிக்குறவர்கள் பகுதியை கண்காணித்து வந்தனர்.
வாகனம் சிறைபிடிப்பு
அப்போது அந்த வழியாக நாட்டு துப்பாக்கி எடுத்துச்சென்ற வடிவேல் என்ற நரிக்குறவரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை வாகனத்தில் ஏற்றினர்.
இதனை அறிந்த நரிக்குறவ பெண்கள் வனத்துறை அதிகாரிகள் வந்த வாகனத்தை சிறைபிடித்து, வடிவேலை விடுவிக்கும்படி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு, துப்பாக்கியையும் ஒப்படைத்தனர். அதன்பிறகே வனத்துறை வாகனத்தை நரிக்குறவ பெண்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






