காரைக்கால் ரெயில் நிலையத்தில் தேசியக்கொடி பறப்பதில்லை

75-வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் காரைக்கால் ரெயில் நிலையத்தில் தேசியக்கொடி பறப்பதில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
காரைக்கால்
75-வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் காரைக்கால் ரெயில் நிலையத்தில் தேசியக்கொடி பறப்பதில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ரெயில்வே டிராவலர்ஸ் வெல்பேர் அசோசியேசன் பொதுச் செயலாளர் அன்சாரிபாபு, திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ரெயில் சேவையில் மாற்றம்
கொரோனாவுக்கு முன் தினசரி காலையில் 6.30 மணிக்கு காரைக்கால் முதல் திருச்சி வரை சென்றுவந்த ரெயில் சேவையானது (வண்டி எண்6839) தற்போது வேளாங்கண்ணி முதல் திருச்சி வரை மாற்றப்பட்டுள்ளது. இதனால் காரைக்கால், நாகூர் மற்றும் வெளிப்பாளையம் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் மதியம் காரைக்கால் முதல் திருச்சி வரை சென்ற ரெயில் சேவை (வண்டி எண்6457) காரைக்கால் முதல் தஞ்சை வரை மாற்றபபட்டுள்ளது. இதனால் காரைக்கால், நாகூர் பகுதி மக்கள் நேரடியாக திருச்சி சென்று வர முடியவில்லை. ஆகவே அதிகாலை விரைவு ரெயில் தினசரி நிரந்தரமாக காரைக்காலிருந்து திருச்சிவரை இயக்கப்பட வேண்டும்.
மறுமார்கத்தில் திருச்சி -காரைக்கால் ரெயில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு காரைக்காலுக்கு 10.30 மணிக்கு வந்து சேருமாறு இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக அமையும். மாலை 4.30 மணிக்கு பிறகு மறுநாள் காலை வரை திருச்சியில் இருந்து திருவாரூர், நாகை, நாகூர், வேளாங்கண்ணி காரைக்காலுக்கு ரெயில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியக்கொடி பறப்பதில்லை
திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்ல காரைக்காலில் இருந்தோ, வேளாங்கண்ணியில் இருந்து ஒரு ரெயிலுமில்லை. ஆகவே, தற்போது இயக்கப்படும் ரெயில் 16729/16730 மதுரை-புனலூர் தினசரி ரெயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். (வழி:விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம் வழி).
தற்போது 75-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். காரைக்கால் ரெயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டகொடி கம்பத்தில் அண்மையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்து. தற்போது பறப்பது கிடையாது. எனவே, 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்படும் நாளில் புதிய தேசிய கொடியை பறக்கவிட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.






