தனியார் வங்கிகளில் கடன் பெற்று பி.ஆர்.டி.சி.க்கு புதிய பஸ்கள்

தனியார் வங்கிகளிலாவது கடன் பெற்று பி.ஆர்.டி.சி.க்கு புதிய பஸ்கள் வாங்க வேண்டும் என சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி
தனியார் வங்கிகளிலாவது கடன் பெற்று பி.ஆர்.டி.சி.க்கு புதிய பஸ்கள் வாங்க வேண்டும் என சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது.
புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் பேசியதாவது:-
புத்துணர்ச்சி
ஏ.கே.டி.ஆறுமுகம் (என்.ஆர்.காங்): ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பினை ஏற்று நடத்தும் நமது நாட்டின் பெருமையை உலகெங்கும் பரவிட செய்துகொண்டிருக்கும் பிரதமருக்கு நன்றி. இந்த மாநாட்டின் கூட்டங்களுள் ஒன்றை நமது புதுவை மாநிலத்தில் நடத்த காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள்.
கவர்னர் தனது உரையில், சிறு தானியங்களை உட்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. பருவம் தவறாமல் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது. மாடித்தோட்டத்தை ஊக்குவிக்க, தோட்டக்கலை பைகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் சரியான நேரத்தில் வழங்கப்பட்டு மீனவ குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். சென்டாக் மூலம் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுத்துறை நலத்திட்டங்களை பொதுமக்கள் நலன்குறித்து கவர்னர் உரையில் இடம்பெற்றது மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தருகிறது.
புதிய பஸ்கள் வாங்குங்கள்
கல்யாணசுந்தரம் (பா.ஜ.க.): புதுவை வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களை வேலையில்லை என்று கூறி அனுப்பி விட்டார்கள். அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும். குடிமைப்பொருள் வழங்கல்துறையில் அதிகரிகள் தவறு செய்கிறார்கள். அதை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகள் கண்ணியத்தோடு செயல்பட வேண்டும்.
நான் அமைச்சராக இருந்தபோது பி.ஆர்டி.சி.க்கு பஸ்கள் வாங்கப்பட்டது. அதன்பின் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. தனியார் வங்கிகளிலாவது கடன்பெற்று புதிய பஸ்களை வாங்குங்கள்.ஆதிதிராவிடர் நலத்துறையின் செயல்பாடுகள் சரியாக இல்லை. சிறப்புக்கூறு நிதியும் செலவிடப்படாமல் உள்ளது.
சர்க்கார் எக்ஸ்பிரஸ்
கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் (சுயே): குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஏனாமுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் குடிநீர் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கியுள்ளனர்.
அதேபோல சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும் என்ற தகவலுக்காக நன்றி.
பூட்டிக்கிடக்கும் நூலகங்கள்
அங்காளன் (சுயே): விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை அந்தந்த பட்டங்களுக்கு தகுந்தாற்போல் முன்கூட்டியே வழங்க வேண்டும். கலை பண்பாட்டுதுறையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் நூலகங்கள் எப்போதும் பூட்டியே காணப்படுகிறது. ரேஷன்கடைகளின் நிலைதான் என்ன?
ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு உரிய அடையாள அட்டை இன்னும் பலருக்கு வழங்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்சு ஓட்ட ஆள்இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களை மாலைவரை இயங்க செய்ய வேண்டும். அரைத்த மாவை மீண்டும் அரைப்பதாக கவர்னர் உரை உள்ளது.






