கைதான 8 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

வெடிகுண்டு வீசி பா.ஜ.க. பிரமுகரை கொலை செய்த வழக்கில் கைதான 8 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்
வெடிகுண்டு வீசி பா.ஜ.க. பிரமுகரை கொலை செய்த வழக்கில் கைதான 8 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள்
புதுவை மாநிலம் வில்லியனூரில் கடந்த மாதம் மங்கலம் தொகுதி பொறுப்பாளர் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமார் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்திய இந்த வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 8 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் போலீசாரின் கவனக்குறைவு இருப்பதாக கருதி தேசிய புலனாய்வு மையத்துக்கு (என்.ஐ.ஏ.) வழக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையில் அவர்களுக்கு உதவ புதுவை காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
விசாரணை
இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் புதுவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று செந்தில்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 8 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்களை வில்லியனூரில் கொலை நடத்த பேக்கரி, வெடிகுண்டு தயாரித்த ஆரியபாளையம் ஓடைவெளி ஆகிய பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கொலையாளிகள் எவ்வாறு கொலை சம்பவத்தை நிகழ்த்தினோம் என செய்து காட்டினர். தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களிடம் வெடிகுண்டு தயாரிக்க உதவியது யார்? எங்கு தயாரிக்க கற்றுக்கொண்டனர் என்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நாளை(வியாழக்கிழமை)விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.