குப்பைகளை அகற்ற 1000 பேருக்கு நோட்டீஸ்


குப்பைகளை அகற்ற 1000 பேருக்கு நோட்டீஸ்
x

காலிமனைகளில் களை அகற்ற 1,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மாவட்ட கலெக்டர் வல்லவன் கூறினார்.

புதுச்சேரி

காலிமனைகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற 1,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மாவட்ட கலெக்டர் வல்லவன் கூறினார்.

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தூய்மை பணி

புதுச்சேரியில் தூய்மை பணி கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. குப்பையில்லா இந்தியா என்ற கருப்பொருளை மையமாக கொண்டு வருகிற 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு அங்கமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி நேரம் தன்னார்வல பங்களிப்புடன் தூய்மை பணி நடக்கிறது.

சந்தைகள், ரெயில் நிலையங்கள், நீர்நிலைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மை பணி நடைபெற உள்ளது. தூய்மைப்படுத்தும் இடத்தில் பொதுமக்கள் செல்பி எடுத்து இணையத்தில் பதிவேற்றலாம். இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

1,000 பேருக்கு நோட்டீஸ்

புதுச்சேரி நகரில் பாதா சாக்கடையில் உடைப்பு ஏற்படும் இடங்களில் மாற்றம் செய்யும் பணி நடக்கிறது. கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் பெரும்பாலான காலி மனைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அதனை அகற்ற உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

காலி மனையின் உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் இருப்பதால் அவர்களை கண்டறிவது சிரமமாக உள்ளது. குப்பைகளை நிலத்தின் உரிமையாளர்கள் அகற்றவில்லை என்றால் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான தொகை நிலத்தின் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக உழவர்கரை நகராட்சி பகுதியில் 1,000 பேருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

கோவில் நிலம்

காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி விவகாரத்தில், அந்த நிலத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு கோவிலிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போலி பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை கோவிலிடம் ஒப்படைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். அவர்கள் அதற்கான பணியை தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story