பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்புகள், புற்கள்


பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்புகள், புற்கள்
x

பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்புகள், புற்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.

வில்லியனூர்

பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்புகள், புற்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.

கால்நடை கண்காட்சி

புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைநலத்துறை சார்பில் மேல் சாத்தமங்கலம் கிராமத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி இன்று நடந்தது. கால்நடைத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்கள் மற்றும் பால் உற்பத்தி குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த கிராமத்தில் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டால் அருகில் உள்ள சிவராந்தகம் கிராமத்தில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. ஆகவே அடுத்த ஆண்டுக்குள் இந்த கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கட்டப்படும். கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவாக உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைத்துறை மூலம் சத்தான தாது உப்பு வழங்கப்படும். மேலும் கோ-5 போன்ற புற்கள் பாதி விலைக்கு வழங்கப்படும்.

உதவித்தொகை

தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி விதவைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இது போன்ற கண்காட்சிகள் இன்னும் பல இந்த கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து சிறந்த கால்நடைகள், கோழிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இயக்குனர் லதா மங்கேஸ்கர், இணை இயக்குனர் குமரன், கால்நடை டாக்டர் ராணி, செங்கேணி, சந்திரன், ஆர்த்தி மற்றும் விவசாயிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 150-க்கும் மேற்பட்ட மாடுகள், கன்று குட்டிகள் மற்றும் சண்டை சேவல், நாட்டுக்கோழிகள் இடம்பெற்றன.


Next Story