அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை


அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
x

புதுவையில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரி வித்தார்.

புதுச்சேரி

அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரி வித்தார்.

தடை

புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. குறிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தாதது, பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை பராமரிக்காதது உள்ளிட்ட குறைகளால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது புதுவை மாணவர்ககள், பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கவர்னர் கண்டிப்பு

இந்தநிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அரசு மருத்துவக்கல்லூரியில் திடீரென ஆய்வு செய்தார். மாணவர் சேர்க்கை அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், மருத்துவக்கல்லூரி இயக்குனர் உதயசங்கர் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அப்போது அவர் உயர் அதிகாரிகளை கடிந்துகொண்டார்.

அதன்பின் மாணவர்கள், பெற்றோர்களை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்கள், பெற்றோர் அச்சம்கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகாரிகள் தவறு

புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட அதிக வசதியுள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் இங்கு படிக்க விரும்புகின்றனர்.

2 சிறிய குறைகளை சுட்டிக்காட்டி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள தவறியுள்ளனர். இது கண்டிக்கக்கூடியது. வருகைப்பதிவேடு, கண்காணிப்பு கேமரா பிரச்சினைகள் இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் நடவடிக்கை

மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற மீண்டும் அகில இந்திய மருத்துவ ஆணையத்துக்கு விண்ணப்பிக்க உள்ளனர். மருத்துவ ஆணையமானது டாக்டர்கள், ஊழியர்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா? என்பதை கண்காணிக்க இந்த முறையை அமல்படுத்தி உள்ளது. மற்றபடி சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் இங்கு முறையாக நடந்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் தடை விலக்கப்பட்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறலாம். இந்த குறைபாடுகளுக்கு அதிகாரிகளே காரணம். அவர்கள் முன்பே இதை முறைப்படுத்தி இருக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

கோபம் வந்தது

மாணவர் சேர்க்கைக்கு தடை என்பதை பத்திரிகைகளை பார்த்துதான் தெரிந்துகொண்டேன். உடனடியாக கோபம் வந்தது. இது கடைசியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். சுகாதாரத்துறை செயலாளருக்கும் தகவல் இல்லை என்றார்கள். தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும். யூனியன் பிரதேசங்களிலேயே புதுச்சேரியில் மட்டும் தான் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. புதுவையின் பெருமை குலைந்துவிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story