புதுவையில் ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறப்பு

புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுவை மாநிலத்தில் ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுவை மாநிலத்தில் ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
வெயிலின் தாக்கம்
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் சராசரியாக 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. எனவே அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வருகிற 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுவை மாநிலத்திலும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறையை நீடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
நமச்சிவாயம் ஆலோசனை
இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி, துணை இயக்குனர் சிவகாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் யோசனை கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து நிருபர்களிடம் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
7-ந் தேதி திறப்பு
புதுச்சேரியில் ஜூன் 1-ந் தேதி (நாளை மறுநாள் வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனையின்பேரில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பள்ளிகள் ஜூன் மாதம் 7-ந் தேதி திறக்கப்படும்.
புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இதை ஏற்று புதுவையில் உள்ள 127 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளுக்கு பாடபுத்தகம் அனுப்பி வைத்துள்ளோம். புதுவைக்கு குறிப்பிட்ட அளவு புத்தகங்கள் வந்துள்ளது. மீதம் உள்ள புத்தகங்கள் நாளை (இன்று) வந்து விடும். பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் வினியோகிக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே இலவச சீருடை, சைக்கிள் ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. மடிக்கணினி இன்னும் 1½ மாதத்திற்குள் வழங்கப்படும். சட்டசபையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழிகாட்டுதலின்படி படிப்படியாக அரசு நிறைவேற்றி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சேர்த்து மொத்தம் 181 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த விண்ணப்பித்து இருந்தன. இதில் 127 அரசு பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சி.பி.எஸ்.இ. வகுப்பு எடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடைத்ததா? என்ற விவரங்களை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.
புதிய ஆசிரியர்கள் தேர்வு
அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் சில ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து ஆசிரியர்கள் இடமாற்றம் கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
புதுவையில் தற்போது புதிதாக 146 ஆசிரியர்களை விரைவில் தேர்வு செய்ய உள்ளோம். அவர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதா? அல்லது தேர்வு நடத்தி தேர்வு செய்வதா? என அமைச்சரவையில் முடிவு செய்யப்படும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் விருப்ப பாடமாக தான் இருக்கும். நாராயணசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது தான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அவருக்கு தமிழ் விருப்ப பாடம் என்பது தெரியாதா? பொய் குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கத்தோடு கூறி வருகிறார்.
மாகியில் போலீசார் தவறு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து முதல் கட்டமாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.