ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கொள்கை முடிவு


ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கொள்கை முடிவு
x
தினத்தந்தி 2 Aug 2023 5:58 PM GMT (Updated: 2 Aug 2023 7:07 PM GMT)

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க புதுவை அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.

புதுச்சேரி

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க புதுவை அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணன், வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம், குதிரை பந்தயம், கேசினோ போன்றவைகளை லாட்டரி மற்றும் பெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி 28 சதவீதம் வரி விதிப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

கொள்கை முடிவு

கூட்டத்தில் பேசிய அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுவை அரசானது ஆன்லைன் சூதாட்டம், குதிரை பந்தயம், கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்க கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்தார். அதே சமயத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அவற்றை நடைமுறைப்படுத்த 28 சதவீதம் வரி விதிக்க முடிவெடுத்துள்ளதை வரவேற்பதாக கூறினார்.

ஜி.எஸ்.டி. சட்டத்தில் வரி ஏய்ப்பு நடக்காத வகையில் கொண்டுவரப்பட உள்ள பல சட்ட திருத்தங்களுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் இப்பொருட்களின் மீது தெளிவான வரிவிதிப்பு கொண்டுவர சூதாட்டம், குதிரை பந்தயம், கேசினோவுடன் கணிக்க முடியாத பந்தயம் என்ற வார்த்தையையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

விவாதத்தில் பங்கேற்ற மற்ற மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பிலும் நிர்வாகத்திலும் சீர்திருத்தத்தையும், எளிமையான நடைமுறையையும் கொண்டுவர வலியுறுத்தினார்கள்.


Next Story