புதுவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம்

புதுவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணத்தையொட்டி முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
புதுச்சேரி
அடுத்த மாதம் 6, 7-ந் தேதிகளில் புதுவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
ஜனாதிபதி வருகை
இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு முதன் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி மற்றும் 7-ந் தேதி புதுவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அவர் புதுவையில் அரசின் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதியின் வருகை தொடர்பாக புதுவை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா தலைமை தாங்கினார். போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், அரசு செயலாளர்கள் ஜவகர், உதயகுமார், குமார், முத்தம்மா, மணிகண்டன், நெடுஞ்செழியன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா உள்பட பல்வேறு அரசுத்துறை இயக்குனர்கள், ஜிப்மர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஜிப்மர் கலையரங்கம்
ஜனாதிபதியின் வருகை குறித்த விவரங்களை செய்தித்துறை செயலாளரும், கலெக்டருமான வல்லவன் விளக்கினார். ஜனாதிபதி பங்கேற்கும் அரசு விழாவினை ஜிப்மர் கலையரங்கத்தில் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஜனாதிபதி பார்வையிட செல்லும் இடங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வருகையையொட்டி அவர் செல்ல வாய்ப்பு உள்ள இடங்கள், சாலைகள் சம்பந்தபட்ட அரசுத்துறை அதிகாரிகள் கண்காணித்து மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அடுத்த கூட்டத்தை ஜனாதிபதி வருகை, நிகழ்ச்சிகள் இறுதியான பின் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதிய திட்டங்கள்
புதுவை வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜிப்மரில் கேன்சர் பிரிவில் புதிய மருத்துவ சேவை வசதிகளையும், புதுவை அரசின் திட்டங்களான கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம், பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்புதொகை வழங்கும் திட்டம், சித்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளையும் விரைவாக தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.