தனியார் பஸ் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்


தனியார் பஸ் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்
x

பாகூரில் தனியார் பஸ் மோதியதில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து 10 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்

பாகூரில் தனியார் பஸ் மோதியதில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து 10 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிரான்ஸ்பார்மர் சேதம்

பாகூர்- கன்னியக்கோவில் சாலையோரத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து கன்னியக்கோவில் சாலை, பழைய மற்றும் புதிய காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் பாகூரில் இருந்து, புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மர் சேதமடைந்ததில் அதில் இருந்த ஆயில் முற்றிலும் கீழே கொட்டியது.

பொதுமக்கள் சாலைமறியல்

தகவல் அறிந்த மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் எந்த வேலையும் நடக்காமல் மாலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பாகூர்- கன்னியக்கோவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

10 மணிநேரம் மின்தடை

இதன் பின் பாகூர் மின்துறை உதவி பொறியாளர் சக்திவேல் நேரில் வந்து சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை சரிசெய்து, உடனே மின் இணைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மாற்று டிரான்ஸ்பார்மர் கொண்டு வரப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் மின்சாரம் இன்றி பாகூர் பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.


Next Story