சட்டசபை நோக்கி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் ஊர்வலம்


சட்டசபை நோக்கி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் ஊர்வலம்
x

புதுவையில் சம்பளம் வழங்கக்கோரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

புதுச்சேரி

சம்பளம் வழங்கக்கோரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

சம்பளமில்லை

புதுவை அரசு சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, ரேஷன்கடை, வேளாண் அறிவியல் நிலையம், பாண்டெக்ஸ், பாண்பேப், வீட்டுவசதி வாரியம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கணக்கில் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. சில நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் தினக்கூலி ஊழியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

சட்டசபை நோக்கி ஊர்வலம்

இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழுவினர் சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்தனர்.

இதன்படி ஊழியர்கள் இன்று காலை புதுவை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை அருகே கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

போலீசார் தடுத்தனர்

ஊர்வலம் அண்ணா சாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதற்கு மேல் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அங்கேயே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி. கவுரவ தலைவர் அபிசேகம், அரசு ஊழியர் சம்மேளன கூட்டு போராட்டக்குழு தலைவர் ஆனந்தராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

அரசு எடுக்கும் முடிவுக்கு...

அதைத்தொடர்ந்து போராட்டக்குழு முக்கிய நிர்வாகிகள் சட்டசபைக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தினார்கள். அப்போது சில நிறுவனங்களை நடத்துவது கஷ்டம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். அதைக்கேட்டுக் கொண்ட போராட்டக்குழுவினர் எந்தெந்த நிறுவனங்களை நடத்த முடியுமோ, அதை நடத்துங்கள். அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க திருத்திய மதிப்பீட்டில் ஏற்பாடு செய்வதாகவும், புதுவைக்கு வரும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிதி கேட்க உள்ளதாகவும் கூறினார்.

அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து புதுவை சட்டசபையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


Next Story