புதுச்சேரி இந்தியாவோடு இணைந்த சட்ட பரிமாற்றநாள்


புதுச்சேரி இந்தியாவோடு இணைந்த சட்ட பரிமாற்றநாள்
x

புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைந்த சட்டப்பூர்வ பரிமாற்ற நாளையொட்டி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கீழூரில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

வில்லியனூர்

புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைந்த சட்டப்பூர்வ பரிமாற்ற நாளையொட்டி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கீழூரில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

கீழூர் வாக்கெடுப்பு

பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி மாநிலம், இந்தியாவுடன் இணைவது தொடர்பான வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடந்தது. அதன்படி மாநில மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து கேட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1954-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

தேனீ.ஜெயக்குமார் கொடியேற்றினார்

அந்த நாள், ஆண்டுதோறும் புதுவை அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் கீழூரில் உள்ள தியாகிகள் நினைவு இடத்தில் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். இதனையடுத்து இருவரும் அங்குள்ள நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, மாவட்ட கலெக்டர் வல்லவன், அரசு செயலாளர் மணிகண்டன், டி.ஜி.பி. சீனிவாஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story